அரசுப் பள்ளி மாணவர்கள் ஜப்பான் பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 2022-2023’ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 100 மாணவர்கள் 03/11/2023 அன்று ஜப்பான் நாட்டிற்கு பயணமானார்கள்.
மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் மாணவச் செல்வங்களோடு ஜப்பான் நாட்டிற்கு பயணமானார். அங்கு மாணவச் செல்வங்களை அழைத்துக்கொண்டு தலைநகர் டோக்கியோவில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களோடு உலக புகழ்ப்பெற்று விளங்கும் மிராய்கான் அருங்காட்சியகம் மற்றும் இந்திய தேசிய பள்ளிக்கு சென்றார்.
மிராய்கான் அறிவியல் அருங்காட்சியகம் தொடர்ந்து பல அறிவியல் சாதனைகளைப் படைத்து வருகின்றது. இந்த அருங்காட்சியகத்தை உலகில் உள்ள பல இலட்சம் மாணவர்கள் பார்த்துச் சென்றுள்ளார்கள். இந்த இடம் தங்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது என தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் தெரிவித்துள்ளார்கள். இந்திய தேசிய பள்ளிக்கு சென்ற அமைச்சர் அவர்களை அப்பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களும் அன்போடு வரவேற்றுள்ளார்கள். அங்கிருந்த நூலகம், வகுப்பறை மற்றும் கற்பித்தல் முறைகளைப் பற்றி அமைச்சர் அவர்களும், மாணவர்களும் பார்வையிட்டார்கள். மாணவச் செல்வங்களின் கலைத் திறமைகளைப் பார்வையிட்டு அங்குள்ள மாணவர்களோடு கலந்துரையாடினார்.
ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு தென்கொரியா நாட்டிற்கும் மாணவர்களை அழைத்துச் செல்லவுள்ளார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.