மாற்றுத்திறன் மாணவிக்காக ரூ.1 லட்சம் நிதி திரட்டி உதவிய அரசு பள்ளி ஆசிரியர்…
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள ஆலம்பாடியைச் சேர்ந்த மார்ஷியா. ஜோன் இரண்டு வயதாக இருந்தபோது காது கேளாமை வாய்பேச இயலாமை இருப்பது கண்டறியப்பட்டது. 2020ம் ஆண்டின் முற்பகுதியில், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, அவரது செவிப்புலன் கருவி (வெளிப்புறச் சாதனம்) வேலை செய்வதை நிறுத்தியது குடும்ப சூழலால் அதை சரிசெய்ய முடியவில்லை. கருவியை சரி செய்ய ரூ.60,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று மாணவியின் தாயார் திவ்யா கூறினார்.
பலவழிகளில் முயற்சி செய்த பின், கடைசியாக பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான சதீஷ்குமாரிடம் உதவி கிடைத்துள்ளது. 1 லட்சத்துக்கும் சற்று அதிகமான நிதியை ஏற்பாடு செய்து, கருவியை சரிசெய்ய உதவி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், “மார்ஷியா ஜோன் படம் வரைவதில் வல்லவர் எதிர்காலத்தில் அவர் ஒரு சாதனை பெண்ணாக வருவார் என்பதில் ஐயமில்லை மேலும் நல்ல வாழ்க்கையும் அமைய வேண்டும், நன்றாக படிக்க வேண்டும்.

அவ்வபோது சாதனத்தில் ஏற்படும் பிரச்சனையால் அவள் பேசுவதிலும் காது கேட்பதிலும் அடைந்த முன்னேற்றத்தை இழந்துவிட்டாள். ஒரு கருவி பழுது காரணமாக மார்ஷியா வாய்பேச இயலாமல் காது கேளாமல் பள்ளி சென்று வருவது என் மனதை மிகவும் வருத்தியது. ஏழ்மை நிலையால் அவரது குடும்பத்தாரால் அதை சரி செய்ய முடியாமல் போனதால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காது கேட்கும் கருவியை அவள் அணியவில்லை. தற்போது கருவியை பழுதுநீக்க தேவைப்படும் முழுதொகையும் செலுத்தியாயிற்று விரைவில் மார்ஷியா திரும்ப காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் பெற போகிறார் என்பது மனமகிழ்வை தருகிறது. அவரது தாயார் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த சேவையை எங்களால் செய்ய முடிந்தது என்றார்.
சாதாரண பின்னணியில் இருந்து வந்த மாணவியின் தாய் திவ்யா பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவர் இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால் ஊனமுற்றவர். ஒரு ஊனமுற்ற நபராக வாழ்க்கையில் பல போராட்டங்கள் சந்தித்ததால் தன் பிள்ளையையும் அப்படியே ஆகிவிட கூடாது என்று போராடி வருகிறார். அவருடைய கணவர் உள்ளூர் இரு சக்கர வாகனக் கடையில் வேலை செய்கிறார். வாழ்க்கை நடத்துவது கடினம். கடன் வாங்கித்தான் இத்தனை வருடங்களையும் சமாளித்து வந்தோம், சில சமயங்களில் கடன் வாங்கக்கூட பணம் இல்லாமல் போய்விட்டது என்றார். தனது மகளுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அவளால் காது கேளாததாகவும் பேச இயலாமல் போனதாகவும் அவர் கூறினார்.
காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் செலவானது. உதவி கோரி அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்து, 2017-ம் ஆண்டு MGMGH-ல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் மார்ஷியா ஜோன். ஒரு வருடம் பேச்சு சிகிச்சைக்காகச் சென்றார். இதனால் அவரது வழக்கமான பள்ளிப்படிப்பு தாமதமானது என்று திவ்யா கூறினார். தற்போது மார்ஷியா ஜோன் ஆலம்பாடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குழந்தைக்கு பேச்சு மற்றும் செவித்திறன் பாதிப்பு குறைந்த சூழலிலும் இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான சூழல் இல்லாமல் இருப்பதால் வருங்காங்களில் இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அரசே சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அக் குழந்தையின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.