சமயபுரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

0 11
Stalin trichy visit

திருச்சி செப்.4 சமயபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சமயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோட்டில் உள்ள சாஸ்தா நகரை சேர்ந்த பாதிரியார் ஜெயராஜ் (வயது 53) பணியாற்றி வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் 4 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுபற்றி நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று காலை இதுகுறித்து கேட்பதற்காக பள்ளிக்கு திரண்டு சென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினர்.

தொடர்ந்து பள்ளிக்குள் சென்ற போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அஜிம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மேலும் தலைமை ஆசிரியர் ஜெயராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.