எச்.ஐ.வி. எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட அளவில், பள்ளிகளிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும், ஸ்ரீரங்கம், தொட்டியம், முசிறி ஆகிய நம்பிக்கையின் மையங்கள் இந்த ஆண்டின் சிறந்த நம்பிக்கை மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கினர்.
கலெக்டர் சிவராசு பேசும் போது, “எச்.ஐ.வி, எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி பாதிப்புடையோரை புறக்கணிக்காமல் ஆதரித்து அவர்களுக்குரிய கல்வி, சுகாதாரம், வாழ்வு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு உதவிட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வியுடன் வாழும் 209 குழந்தைகளுக்கு கடந்த ஆண்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி நோயைக் கண்டறிய 33 நம்பிக்கை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், ஏழு துணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 8 சுகவாழ்வு மையங்கள், இலவச சட்ட உதவி மையம் மற்றும் 4 தொண்டு நிறுவனங்கள் ஆகியன செயல்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் மணிவண்ணன், இணை இயக்குனர்(நலப்பணிகள்) டாக்டர் லட்சுமி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா, நகா் நல அலுவலர் யாழினி, துணை இயக்குனர் (காச நோய்) டாக்டர் சாவித்திரி, மாவட்ட நம்பிக்கை மைய மேற்பார்வையாளர் புஷ்பலதா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.