காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதை பார்க்க முடிகிறது. செல்போனில் கல்வி, பொழுது போக்கு, விளையாட்டு, சமையல் போன்ற எண்ணற்ற செயலிகள் உள்ளன. இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிளே ஸ்டோரில் கிரின்டர் என்ற செயலி உள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு வாட்ஸ் அப் போன்று குறுஞ்செய்தி அனுப்பலாம்.
உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இதுபோன்று கலாசாரம் வெளிநாடுகளில் சாதாரண விஷயம். தற்போது திருச்சியிலும் இந்த புதிய கலாசாரம் பரவி வருகிறது. திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள் என பலரும் இதனை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி, ஆபாச படங்கள் அனுப்பி வருகின்றனர்.
இந்த செயலியை பயன்படுத்தி திருச்சியை சேர்ந்த ஒரு கும்பல் இளைஞர்களிடம் ஆசை வார்த்தை பேசி ஓரினச் சேர்கைக்கு அழைத்து. தனியார் ஓட்டல் அல்லது நண்பர்கள் வீடு என அவர்களை வரவழைக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம், நகை, செல்போன் என அனைத்தையும் பறித்து விட்டு தாக்கி விரட்டி விடுவார்கள். பின்னர் அந்த இளைஞர்கள் இதை பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல், போலீசில் புகார் கொடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் 35 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் மாட்டி கொள்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் ஒருவர் தன் பெயரை குறிப்பிடாமல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த கும்பலை பிடித்துள்ளனர். இது பற்றி போலீசார் ஒருவர் கூறுகையில் இது போன்று திருச்சியில் இந்த செயலியை பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் உலா வருகிறது. இதில் பாதிக்கப்பட்டோர் புகார் கொடுக்க முன் வருவதில்லை. மேலும் இளைஞர்கள் இது போன்ற செயலியை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குற்ற செயல்கள் நடைபெறாமல் தவிர்க்கலாம். இந்த சம்பவம் தற்போது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.