திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் இறந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் பேட்டியில் கூறுகையில்…. “எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது.ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. நேற்று இரவு ஆடு திருடர்களை பிடிக்க எஸ்.எஸ்.ஐ பூமிநாதனுடன் இணைந்து மற்றொரு காவலரும் சென்றார்.அவர் வேறு வாகனத்தில் சென்றதால் வழி மாறி சென்று விட்டார்.
இறந்த எஸ்.எஸ்.ஐ குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்