போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் : மாநகர காவல் ஆணையர்
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்க காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
அதன்படி இன்று(24.03.23)-ந்தேதி, பெரியார் ஈ.வே.ரா கல்லூரி கலையரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே “போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்” நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதில் இந்தியாவில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகாமல் இருக்க, மேலும் அதனால் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், தொழில் பாதிப்பு மற்றும் சமூகநல பாதிப்பு போன்றவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என சிறப்புரையாற்றினார்கள்.
இளம் வயதில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் ஐ.கியூ திறன் குறைந்து நினைவாற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டு குடும்பம் சீர்கெட்டும், சமூகம் பாழடைந்துவிடும், எனவே, இதனை சரி செய்து சீர்மிகு தமிழ்நாட்டினை உருவாக்கிட இளைஞர்களாகிய நீங்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமலும், அப்படி அடிமையானவர்கள், தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தால் மனநல சிகிச்சை அளித்திட இலவச ஆலோசனை எண்.10581-க்கு அழைத்தும் ஆலோசனை பெற வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் 96262-73399 என்ற எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100-க்கும், தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என சிறப்புரையாற்றியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவகளுக்கிடையே திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் தெற்கு சரகம், கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
திருச்சி மாநகரத்தில் முதன்முறையாக இந்த வருடம் இதுவரை தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 29 நபர்கள் மீது சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கையும், கஞ்சா விற்பனை செய்யும் 10 எதிரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் இதுபோன்று “போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்” தொடர்ந்து நடைபெறும் எனவும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்தார்கள்.