சர்வதேச பெண் குழந்தைகள் தினம் – பள்ளி மாணவியின் கேள்விகளுக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர்!

0 499
Stalin trichy visit

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வரும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பெண் குழந்தைகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு பள்ளி மாணவி தங்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்களில் ஏடுகள் எடுத்துக் கொள்வதாகவும், தரமான புத்தகங்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் இனி வரும் காலங்களில் தரமான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தை திருமணம் நடைபெற அனுமதிக்க மாட்டோம்… குழந்தைகளின் கல்வி தொடர விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் உரிய உதவி புரிவோம் என உளமாற உறுதி அளிக்கிறோம் என்ற குழந்தைகள் திருமணம் தடுத்தல் உறுதிமொழி மெகா பேனரில் தனது கையொப்பத்தை இட்டு தொடங்கி வைத்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.