வெள்ளி விழா ஆண்டில் கலைக்காவிரி
கலைக்காவிரியின் 25-ஆம் ஆண்டு – வெள்ளி விழா
7.1.2023- 8.1.2023
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து”
எனும் உலகப் பொதுமறைக்கேற்ப திருச்சி மலைக்கோட்டை மாநகரின் பெருமைக்கும் புகழுக்கும் மகுடமாகத் திகழ்வது தமிழர் கலைப் பண்பாட்டின் கோட்டையாக விளங்கும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி. காவிரி பாயும் சோழனின் மண்ணில் தமிழர்களின் செவ்வியல் கலையான பரதம், செவ்வியல் குரலிசை, வீணை, மிருதங்கம், தாளக்கருவி தோற்கருவி, குழல் என ஆய கலைகளின் முதன்மைக் கலைகளான மேற்சொன்ன யாவற்றுக்கும் தாய்மடியாக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் மண்ணில் பெருந்தொண்டாற்றி வருகிறது. கடைக்கோடியில் உள்ள சாமானிய உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கும் கலைப் பண்பாட்டை கற்றுத்தந்து பல முதல் தலைமுறை கலைஞர்களை உருவாக்கும் பாமர மக்களின் பல்கலைக்கழகம் என்றால் மிகையில்லை. கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக நுண்கலைசார் உயர்கல்வித்துறையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் வரை பயிற்றுவிக்கும் தென்னிந்தியாவின் முதல் தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை ஆளுகையில் இயங்கும் நுண்கலைக் கல்லூரி. உயர்கல்வித்துறையின் கீழ் தமிழக அரசு நிதியுதவிப் பெற்று இயங்கும் கல்லூரி, கடந்த 25 ஆண்டுகாலம் திருச்சிக்கும் மாநிலத்திற்கும் மாநிலம் கடந்து உலக நாடுகளிலும் கலைக்காவிரியின் மாணவர்கள் கற்றும் பெற்றும் நுண்கலைகளைக் கற்பித்தலிலும் தனித்தன்மையுடன் புகழ்பெற்றுத் திகழ்கின்றனர். ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் கலைகள் வழியாக மானுட நேயத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் நிறுவனர் தந்தை மோன்சிஞோர் எஸ்.எம். ஜார்ஜ் அடிகளார் “கலை வளர மனிதம் மலர” என்ற விருது வாக்கினை இம்மண்ணுக்கு விட்டுச் சென்றுள்ளார்.
இந்திய வெள்ளி விழா நிகழ்வில் தலைமையேற்கும் ஆயர்களான மதுரை மறைமாவட்ட ஆயர், Dr.அந்தோணி பாப்புசாமி, திருச்சி மறைமாவட்ட ஆயர் Dr.S.ஆரோக்யராஜ், தூத்துக்குடி மறைமாவட்ட சிறப்புநிலை ஆயர் யுவான் அம்புரோஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் Dr.ஜூடு பால்ராஜ், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் Dr.தாமஸ் பால்சாமி ஆகியோர் முதல்நாள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
சிறப்பு விருந்தினராக நாட்டுப்புறக் கலைஞர்களான Vijay TV புகழ் கலைக்காவிரி மாணவர் Dr.செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவின் கலைநிகழ்வுகள் நடைபெறும்.
இரண்டாம் நாள் 08.01.2023 ஞாயிறு அன்று தலைமையேற்கும் ஆயர்களான தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் திருச்சி மறைமாவட்ட ஆயர் Dr.S.ஆரோக்யராஜ், சிறப்பு விருந்தினராக பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை தலைவரும் கலைக்காவிரியின் முன்னாள் மாணவருமான பிரபின் வில்லாரிஸ் குழு கலைநிகழ்வு நடைபெறும்.
எனவே இந்த ஆண்டு வெள்ளி விழாவினை உலகத் தமிழர்களுக்கு எடுத்துச்சென்று தமிழர் கலைகளின் மாண்பை பறை சாற்றிட துணை புரிய வேண்டுகின்றோம்.