லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது
திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை நேற்று போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மணப்பாறை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரப்பூர் பகுதியில், மணப்பாறை காமராஜர் நகரை சேர்ந்த பிச்சைமணி மகன் ஆறுமுகம்(50) அரசால் தடை செய்யப்பட்ட அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், கையும் களவுமாக பிடிபட்டார். லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீஸார், ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.