மணப்பாறை எம்.எல்.ஏ. பெயரில் மோசடி செய்தவர் மீது புகார்
திருச்சி, ஜன.7 திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினராக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் சமது உள்ளார். அவரது தனி உதவியாளராக காதர் மொய்தீன் என்பவர் உள்ளார்.
இந்நிலையில் மணப்பாறை அருகே உள்ள வளநாடு கைகாட்டியில் செருப்புக் கடை வைத்துள்ள அப்துல் ரகுமான் என்பவர் மணப்பாறை எம் எல் ஏ பெயரை தவறாக பயன்படுத்தி பிராம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவருடைய மனைவி வெண்ணிலாவிற்கு ரேஷன் கடை உதவியாளர் பணி வாங்கித்தருவதாகக்கூறியுள்ளார். வேலை வாங்கித் தர ரூ.9 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்ததாகக்கூப்படுகிறது.
இதனையடுத்து மணிவேல் முன் பணமாக ரூ. 3 லட்சம் கொடுத்தபோது, மேலும் ரூ.3 லட்சம் தரவேண்டும் என அப்துல் ரஹ்மான் கேட்டுள்ளார். பின்னர் இரண்டாம் தவணையாக மேலும் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சத்தை வளநாடு கைகாட்டியில் உள்ள செருப்புக் கடையில் வைத்து அப்துல் ரஹ்மானிடம், மணிவேல் ரொக்கப்பணமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு முறை பணம் கொடுத்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் இன்று வெளியாகி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் கட்டுக்கட்டாக பணம் வாங்குவதும், அப்துல்சமது தனி உதவியாளரான காதரிடம் பேசி விட்டேன் 98 சதவீதம் வேலை உறுதியாகி விடும் என்று சொல்லிவிட்டார்கள் என்று அப்துல் ரகுமான் பேசுவதும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சிமேற்கு மாவட்ட துணைத்தலைவர் அக்பர்பாட்ஷா வளநாடு காவல்நிலையத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது தனி உதவியாளர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவர்களது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், சம்பந்தப்பட்ட அப்துல் ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்ககூறி புகார் அளித்துள்ளார்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரின் தனி உதவியாளர் வேலை வாங்கித் தர பணம் வாங்கக்கூறியதாக பணம் பெற்ற வீடியோ வெளியான சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.