நீதிமன்றத்தை அவமதிக்கும் சீமான் : டி.ஐ.ஜி. வருண்குமார் வழக்குரைஞர் பேட்டி
திருச்சி, ஜன. 8 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்.4ல் கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனிப்பட்ட புகார் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்காக டிஐஜி வருண் குமார் கடந்த டிச.30ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-1 இல் நீதிபதி பாலாஜி (பொறுப்பு) முன்பு ஆஜரானார். தொடர்ந்து வழக்கு விசாரணை ஜன.7க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டிஐஜி தரப்பு சாட்சிகளாக புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் ராஜா (33) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் சாட்சியங்களை பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண்குமாரும் நேரில் ஆஜரானார்.
சாட்சி விசாரணை முடிந்து வெளியில் வந்த டிஐஜி வருண்குமாரின் வழக்குரைஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் பேசி வருகிறார். நீ முடிந்தால் தண்டனை வாங்கி கொடுத்திடு பார்ப்போம்’ என பேசியிருப்பது, டிஐஜிக்கு விடப்பட்ட சவாலா அல்லது நீதிமன்றத்திற்கா?. வழக்கு விசாரணையில் இருக்கும் போது இவ்வாறு கடுமையாக பேசுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பேசுவதையும் நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் அவர் பேசிய காணொளிகளையும், எழுத்து மூலமாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இந்த வழக்கு தொடர்ந்ததில் இருந்து சீமான் மனநலம் பாதித்தது போல் பேசி வருகிறார். அடிப்படை அறிவே இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை என்றார்.
மேலும் இவ்வழக்கை வரும் ஜன.21 ஆம் தேதியன்று, மேலும் ஒரு சாட்சி விசாரணைக்காக நீதிபதி பாலாஜி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.