அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பு மக்கள் உற்சாக வரவேற்பு
திருச்சி, ஏப்.7 முதலமைச்சரின் பாரட்டை பெறவைத்த அமைச்சரை உற்சாகமாக வரவேற்ற பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பு மக்கள்…
திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பழங்கனாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அங்கு வாழும் சுமார் 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கமாக ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பாக இல்லாமல், அனைவரும் உள்ளார்ந்த அன்போடு அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரவேற்றனர்.
இதற்கு காரணம், இந்த பூலாங்குடி நரிக்குறவர் காலனி மக்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, அதற்காக முதலமைச்சரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பதால் தான். பூலாங்குடி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் குடியிருப்பு, பழங்கனாங்குடி ஊராட்சியிலேயே சற்று உள்ளடங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து பள்ளிக்கூடமும் தொலைவில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள், தங்களுடைய தொழில் நிமித்தமாக அன்றாடம் வெளியூர்களுக்குச் சென்று விடுவதால், அங்கிருந்து பள்ளிக்குச் செல்லும் சுமார் 80 குழந்தைகள் முறையாக பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதை கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் தெரிவித்த நிலையில், மாணவச் செல்வங்கள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்றுவர தன்னுடைய சொந்த ஏற்பாட்டில் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் நாள்தோறும் காலை 2 முறை, மாலை 2 முறை என இயங்கும் அந்த வேனை பயன்படுத்தி மாணவச் செல்வங்கள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். அவர்களின் கற்றல் ஆர்வமும் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் பெற்றோரும் கவலையின்றி தங்களுடைய தொழில்களை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்த காணொலியை மார்ச் 31ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதனை ஏப்ரல் 1ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் பார்த்து, தன்னுடைய சமூக வலை தளபக்கங்களிலும் பகிர்ந்து பாராட்டி வெளிப்படுத்தி இருந்தார்.
இது பூலாங்குடி நரிக்குறவர் சமூக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த தங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சரின் கவனத்திற்கு தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு அளிக்க முக்கியத்துவத்தை கொண்டு சென்றதோடு, தொடர்ந்து தங்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருவதால் தான் பூலாங்குடி மக்கள் வாக்குச்சேகரிக்க வந்தபோது அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர். அதிலும் குறிப்பாக, அந்த மக்களில் ஒருவர் அமைச்சரின் பிரச்சார வாகனத்தில் ஏறி, தங்களுக்கே உரிய “வாக்ரி பூலி” என்ற மொழியில் பேசி, அமைச்சருக்கு நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தான் 3வது முறையாக வெற்றிபெறும் பட்சத்தில் பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் மேலும் பல திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்குறுதி அளித்தார்.