திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கடைவீதி பகுதியிலிருந்து கூத்தைப்பார் சாலை வழியே பகவதிபுரம் வ.உ.சி. நகர், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் செட்டியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் திருவெறும்பூர் ரயில் நிலையம் வழியாக தண்டவாளத்தை கடந்து சிரமப்பட்டு சென்று வருகின்றனர். ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று

வந்தால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வர வேண்டிய அவல நிலையில் இருந்து வருகின்றனர். ஆகையால் திருவெறும்பூர் ரயில்நிலையம் ஆஞ்சநேயர் கோயில் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் ஒரு சுரங்கபாதை அமைத்து கொடுக்க வேண்டி திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திருச்சி மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் சிவக்குமாடும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை அழைத்து வந்து திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் சுரங்கபாதை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.