புறத்தாக்குடி புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக்கண்காட்சி
திருச்சி மாவட்டம் புறத்தாக்குடி புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாள் ஓவியக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று பள்ளி தலைமை ஆசிரியர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புறத்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த ஓவியங்கள் அனைத்தும் ஆயில் பெயிண்டிங், பென்சிலால் வரையப்பட்ட ஓவியங்கள், இன்னும் மற்ற வண்ண பூச்சுகளால் வரையப்பட்ட ஓவியங்கள் என பார்ப்பவர்களை மனம் கவர வைத்துள்ளது.
இந்தக் கண்காட்சியை நேரில் வந்து பார்வையிட்ட ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஓவியங்களை விரும்பும் ரசிகர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் ரசித்ததோடு மனதிற்கு பிடித்த ஓவியங்களையும் அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

இரண்டாவது நாளில் அப்பள்ளியில் பயிலும் 55 மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று ஓவியங்களுக்கு பரிசுகளும் மற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்களுக்கு தன்னுடைய கைவண்ணத்தால் உயிர்கொடுத்த ஓவியர் பிரிட்டோ ஞானசீலனுக்கு அப்பகுதியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.