நகை அடகு கடை உரிமையாளரிடம் நகைகளை பறித்ததாக போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை
திருவெறும்பூரில் உள்ள நவல்பட்டு ரோடு நகை அடமான கடை உரிமையாளரை மிரட்டி அத்துமீறி நகைகளைப் பறிமுதல் செய்து சென்ற நாமக்கல் போலீசாரை கண்டித்து நகை அடமான கடை உரிமையாளர்கள் சங்கம்& வியாபாரிகள் கூட்டமைப்பு கூட்டமைப்பு சார்பில் திருவெறும்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி திருவெறும்பூர் வஉசி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நவல்பட்டு சாலையில் பெல் பைனான்ஸ் என்ற நகை அடமான கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு வந்த நாமக்கல்லை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட போலீசார் அவரிடம் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணை நடத்தினர்.
மேலும் அவரை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரசீது காண நகை உட்பட ஆறே முக்கால் நகைகளை நாமக்கல் போலீசார் பறிமுதல் செய்து சென்றனர்.
மேலும் நகைகளை பறிமுதல் செய்ததற்கு எழுதி கொடுக்காமல் நாமக்கல் போலீசார் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நகை அடமான கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் நாமக்கல் போலீசாரின் அத்துமீறலை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருவெறும்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில், கடைக்கு வந்த நாமக்கல் போலீசார் 4 ரசீதுகளை காண்பித்து நகைகளை பெற்றுக்கொண்டதாகவும், மேலும் அருகில் உள்ள தைல காட்டிற்கு அழைத்துச் சென்று குற்றவாளியை பாவிப்பது போல் நடத்தியுள்ளதாகவும், மேலும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உட்பட ஆறேமுக்கால் பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரின் இத்தகைய நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், நாமக்கல் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது