திருச்சி சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் மனு போட்டு பார்த்து வந்தனர். வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழக்கிழமைகளில் தண்டனை கைதிகளையும் பார்க்கலாம். இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு முதல் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு பேசுவதற்காக சிறைக்குள்ளயே செல்போன் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய சிறைக்கு புதிதாக 6 செல்போன்களும், சிம்கார்டுகளும் வாங்கப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் கைதிகளை சிறைக்குள் வந்து நேரடியாக பார்க்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பிறகு கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்ததால் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கைதிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் சிறை கைதிகளை உறவினர்கள் பார்க்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று திருச்சி மத்திய சிறையில் 4 கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர். ஆனால் தற்போது கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் 36 நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். கட்டாயம் 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். வழக்கமாக ஒரு கைதியை பார்க்க 3 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 பேர் மட்டுமே பார்க்க முடியும். மேலும், கைதிகளை பார்ப்பதற்கு ஒருநாளைக்கு முன்பே சிறையில் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.