ரெயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
கடந்த 02.07.22-ம்தேதி திருச்சி ரெயில்வே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜங்சன் நடைமேடை பெஞ்சில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.2030/- பறித்துக்கொண்டு ஓடியதாக கொடுத்த புகாரின்பேரில் எதிரி ஆல்வின்குமார் வயது 32, த.பெ.காமராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி ஆல்வின்குமார் மீது திருச்சி ரெயில்வே காவல்நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய 2 வழக்கும், சென்னை எழும்பூர் ரெயில்வே காவல்நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய 4 வழக்குகள் உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, எதிரி ஆல்வின்குமார் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், ரெயில் பயணிகளிடம் பணம், செல்போன் மற்றும் லேப்டாப் திருடுவதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி ரெயில்வே காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.