திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. வழக்கம்போல கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர். அப்போது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உப்பிலியபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஆயுதங்களால் உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த கோயிலில் இதேபோன்று திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.