பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்; அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டார்!
திருச்சி பீம நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, விழாவினை தொடங்கிவைத்து உரையாற்றி,

பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தினை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணர்வு
கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி பள்ளி மேலாண்மை குழு மீண்டும் சீரமைக்கப்பட்டு எழுச்சியுடன் செயல்பாட்டுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள், மாணவர்களின் கற்றல் செயல்பாடு என அனைத்தும் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, முதன்மைக்கல்வி அலுவலர் ர.பாலமுரளி ஆகியோர் உடனிருந்தனர்.