படியில் பயணம்; நொடியில் மரணம் அடைந்த வாலிபர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த கவுண்டம்பட்டி அரிசன தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது37). இவர் திருச்சியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கவுண்டம்பட்டி செல்லும் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். படிக்கட்டில் நின்று வந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.