வீட்டில் ஒரு வாரமாக அழுகிய நிலையில் கிடந்த உடல்
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகமல் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த பத்து வருடமாக இவருக்கு பக்கவாத நோய் இருந்து வந்துள்ளது.
இதனால் இவருக்கு அவருடைய அக்கா, அண்ணன் மற்றும் நண்பர்கள் உதவி செய்து வந்துள்ளனர். சீனிவாசன் கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய நண்பர் சின்னப்பா என்பவர் பிரியாணி கொடுப்பதற்காக சீனிவாசனின் வீட்டிற்கு வந்துள்ளார்.
நீண்ட நேரமாக கூப்பிட்டும் சீனிவாசன் கதவை திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக கூப்பிடலாம் என்று சென்றபோது ஜன்னல் வழியாக துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பொன்மலை போலீசார் அழுகிய நிலையில் இருந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.