திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(20). கல்லூரி மாணவன். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திருச்சி பாரதிதாசன் சாலையில் தங்களது ரேஸ் பைக் மூலம் ரேசில் ஈடுபட்டனர்.
இதில் அவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளானார்கள். அப்போது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது கோவையில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ் மீது ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.