வாலிபர் தவறவிட்ட செல்போனை தாயுடன் சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த மாணவி

0 254
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர் மணப்பாறை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகள்கள் ஹரிணி, கீர்த்தனா ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை, தன் வீடுள்ள பகுதியில் குளங்கள் நிரம்பி வழிந்தோடுவதை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அணிந்திருந்த ஜெர்க்கினில் இருந்து செல்போன் ஒன்று தவறி விழுந்தது. இதைப்பார்த்த கீர்த்தனா அந்த செல்போனை எடுத்துள்ளார். 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய செல்போனாக இருந்துள்ளது.

அதை உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த பிளஸ்2 முடித்துள்ள மாணவி கீர்த்தனா, உடனடியாக ஆட்டோவில் தனது தாயுடன் மணப்பாறை போலீஸ் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்ட் ஜனனிப்ரியாவிடம் நடந்ததைக் கூறி, தான் கண்டெடுத்த செல்போனை ஒப்படைத்துள்ளார்.

மாணவியின் நேர்மையை பாராட்டிய போலீஸ் துணை சூப்பிரண்ட் அவரை வாழ்த்தினார். உடனடியாக இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சம்பத் மூலம், செல்போனை தொலைத்த வாலிபரை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவரிடம், போலீஸ் துணை சூப்பிரண்டு முன்னிலையில் மாணவி கீர்த்தனாவே செல்போனை ஒப்படைத்தார். வாலிபர் தவற விட்டு சென்ற செல்போன் உடனடியாக கிடைத்து விட்டதில் சந்தோஷமான வாலிபர், மாணவி கீர்த்தனாவுக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சென்றார். நேர்மையுடன் செல்போனை ஒப்படைத்த மாணவி கீர்த்தனாவை போலீசாரும், அங்கிருந்தவர்களும் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.