திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் சீரங்கன் மகன் தர்மராஜ்(63). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் துறையூர் அருகே உள்ள பச்சை மலை ஆகும். அங்கு 2 மகன்கள் வீடு நிலத்தை பார்த்துக்கொண்டு குடியிருந்து வருகின்றனர். இவர் புள்ளம்பாடி பகுதியில் பணிபுரிந்த காரணத்தால் இங்கேயே வீடு கட்டி மனைவி மகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி தனபாக்கியம் மகள் அனிதா மருமகன் அன்பழகன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தர்மராஜ் தனது மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான துறையூருக்கு சென்றுள்ளார்.

மதியம் 1 மணி அளவில் தர்மராஜ் மனைவி தனபாக்கியம்(55). தனது மருமகனை அழைத்துக்கொண்டு ஆடு மாடுகளை மேய்க்க காட்டுக்குச் சென்று உள்ளனர். துறையூர் சென்று மாலை 5 மணி அளவில் தர்மராஜ் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய தர்மராஜ் வீட்டின் கதவை பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தர்மராஜ் வீட்டின் சாமி அறையில் சென்று பார்த்தபோது பீரோ, இரும்புப்பெட்டி திறந்து கிடந்தது. உடனடியாக தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு இரும்பு பெட்டியை பார்த்தபோது, நகைகள் மற்றும் பணம் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து உடனே கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தர்மராஜ் வீட்டிலிருந்த இரும்புபெட்டியில் தாலிக்கொடி, நெக்லஸ், சரடு தங்க மோதிரம், தோடு உள்ளிட்ட மொத்தம் 19 பவுன் நகை, ரூ.47 ஆயிரம் பணம் ஆகியவை காணவில்லை என தெரிவித்தனர். இதனையொட்டி தனிப்படை அமைத்து நகைகொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.