ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவில் வைகுண்ட ஏகாதேசி பகல்பத்து 8ம் நாள் திருநாள்
பூலோக வைகுந்தமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா – பகல் பத்து எட்டாம் திரு நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து சார் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை – திருவரங்கணின் எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே குவிந்த பக்தர்கள்.
காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தன்னில் வானளாவில் கோவில் கொண்ட அரங்கனே என்கிற பாடலுக்கு ஏற்ப அகண்ட பரந்த ஆலயமும் – உலகில் வேறு எங்கும் இல்லாத அளவில் நிமிர்ந்து கம்பீரமாக காட்சி தரும் ராஜ கோபுரமும் கொண்ட ஸ்ரீரங்கத்தில் இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா 22ம் தேதி துவங்கியது.
பகல் பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து சார்க் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல் பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் இன்று முத்து சார் கொண்டை அலங்காரத்தில் மகர கர்ன பத்ரம் – மார்பில் பருத்திப்பூ பதக்கம்,அதன் மேல் நாச்சியார் பதக்கம், சந்திரகலை,மகரி அடுக்கு பதக்கங்கள்,வைர அபய ஹஸ்தத்துடன்,பச்சை பட்டு வஸ்திரம் அணிந்து பவள மாலை சிகப்புக்கள் மூன்றடுக்கு மகர கண்டிகை சாற்றி அர்ஜுன மண்டபத்தில் காட்சியளிக்கிறார்.
முன்னதாக
மூலஸ்தானத்தில் இருந்து
நம்பெருமாள் புறப்பட்டபோது – ரங்க ராஜா – ரங்க பிரபு – கோவிந்தா என்கிற பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கம் இட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.
நம்பெருமாள் புறப்பாடுடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களும் வலம் வந்து அர்ஜுன மண்டபம் அடைந்தனர் – நாள்தோறும் காலை 200 நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் மாலை 200 பாசுரங்களும் வேத விண்ணப்பகர்களால் இங்கு விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.
இதே போல் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது – பெருமாள் பெண்ணாக உருவெடுத்த நாச்சியார் திருக்கோலம் என்கிற மோகனி அலங்காரம் வருகின்ற 1ம்தேதி காலையும்
முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையும்
நடைபெற உள்ளது.