ரயில்வேக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்ததை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் லாரியை சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!
திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள குட்செட் யார்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் அரிசி, கோதுமை, உரம் மற்றும் நிலக்கரி போன்ற பொருட்கள் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். இந்த லாரிகள் நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு தாரைவார்த்ததால் இரண்டு மடங்கு வாகன நிறுத்தம் கட்டணம் உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை லாரி நிறுத்தும் இடத்தில் வைக்காமல் சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் சங்கர் கூறுகையில்….கடந்த நான்கு வருடங்களாக இந்த லாரி நிறுத்தப்படும் இடத்திற்க்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.நான்கு வாரங்களுக்கு முன்னர் எங்கள் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் குத்தகைக்கு எடுத்து நடத்தினோம். சில பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்கள் கேட்ட பணத்தை எங்களால் சரிவர கொடுக்க இயலவில்லை. இதன் காரணமாக இந்த இடத்தை தனியாருக்கு ரயில்வே நிர்வாகம் குத்தகைக்கு விட்டுள்ளது. இதனால் வாகன நிறுத்த கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.இந்த கொரோனா சூழ்நிலையிலும் இதுபோன்ற கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது எனவே எங்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த இடத்தை ரயில்வே நிர்வாகத்திடம் பேசி நாங்களே ரூபாய் மாதம் ஐம்பதாயிரம் வீதம் வழங்கி நிலத்தை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து பரிசீலனை செய்து எங்களுக்கு இந்த இடத்தை வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.