இருசக்கர வாகனத்தை திருடி சென்ற போது சரக்கு வேன் மோதி விபத்து
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மறவனூர் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வஊசி நகரை சேர்ந்த குமார், துளசி, சக்திவேல் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்திய போது விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று இரவு திருடிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெருபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.