மருத்துவக்கல்லூரி முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி; இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பணிபுரிய 105 பேர், ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு மீண்டும் நேர்காணல் நடப்பதாக தகவல் வந்ததையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ காப்பீட்டு ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 16-ந் தேதி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து மருத்துவ காப்பீட்டு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.) தலைவர் மோகன் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எங்களுக்கு மீண்டும் நேர்காணல் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். இதையடுத்து இன்று ( வெள்ளிக்கிழமை) தொழிலாளர் நல அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.