முயல் வேட்டையாடிய இருவர் கைது
திருச்சி, ஜன.19 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளுடன் முயல் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை திருச்சி மாவட்ட எல்லைப்பகுதியைச் சேர்ந்ததாகும். கொல்லிமலையில் வாழும் மலைவாழ்மக்கள், தங்களது அத்யாவசிய தேவைகளுக்காகவும், பலா, வாழை. மிளகு போன்ற விளைபொருட்களை சந்தைப்படுத்தவும் கொல்லிமலையிலிருந்து வரும் தடநடை பாதை வழியாக புளியஞ்சோலைக்கு ,தொன்று தொட்டு வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வனத்துறை காவலர்கள் மணிகண்டன் கவாஸ்கர் ஆகியோர் இரவு ரோந்துப் பணியில் இருந்த போது புளியஞ்சோலை பகுதியில் நெற்றியில் பேட்டரி விளக்குடன் இருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் நடமாடுவது கண்டு,விரட்டிப் பிடித்தனர் வனத்துறையினரின் விசாரணையில், கொல்லிமலை தேவனூர் நாடு சூளவந்திப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் (40), அண்ணாதுரை (43) இருவரும் மலையிலிருந்து தடநடை பாதை வழியாக கீழே வந்து வனப்பகுதியில் முயல் வேட்டை ஆடியதும், ஒரு முயலை வேட்டையாடிக் கொன்று கையில் வைத்திருந்ததும் தெரிய வந்தது.முறையான உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், சட்ட மீறலாக வனப்பகுதியில் வேட்டையாடியதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.