திருச்சி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதனை திருச்சி வெஸ்ட்டரி பள்ளியில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்.எல்.ஏக்.கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 22 லட்சத்து 82 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 738 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணையாக 3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 632 இடங்களில் முகாம்கள் அமைத்து ஒரே நாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்றைய தினம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 382 இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. காலை 7 மணியில் இருந்து இதுவரைக்கும் 6 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முழுக்க முழுக்க வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவிரியில் புதிய பாலம் விரைவில் வரும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
கோணக்கரை சாலையை சீர்படுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. திருச்சியை சுற்றி அரைவட்ட சாலையை ஏற்படுத்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தல் சொன்ன தேதியில் கட்டாயமாக நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அ.தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.
நீதிமன்றம் என உத்தரவு பிறப்பிக்கும். அதன்படி தேர்தல் நிச்சயமாக நடத்துவோம். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை நாங்கள் இணைந்து தான் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், அப்துல் சமத், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.