திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி அமிர்தம். விவசாய கூலித்தொழிலாளியான இவரது கணவர் இறந்து 20 நாட்கள் ஆன நிலையில் இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் அணுகியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ரூ.ஆயிரம் லஞ்சமாக இன்று மதியம் அவரது அலுவலகத்தில் கேட்டுப்பெற்ற போது டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில்,
அரசுத்துறைகளில் பணியாற்றி வருபவர்கள்

லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அரசு துறை அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் இந்த செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கு அரசுத்துறை அதிகாரிகளை அணுகும்போது அவர்கள் லஞ்சம் ஏதேனும் கேட்டால், உடனே பொதுமக்கள் +91-44-22321090, 22321085, 22310989, 22342142 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் அளித்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.