விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழா
புதுக்கோட்டை, மே.8 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இன்று கிடாய் வெட்டு, படுகளம் நடைபெறுகிறது.
விராலிமலையில் பிரசித்திபெற்ற மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தெய்வமானது விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களின் குல தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இச்சிறப்புமிக்க இக்கோவிலில் வருடம்தோரும் மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு சித்திரை மாதத்தில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையன்று(ஏப்ரல்-23) பூச்சொரிதழ் விழா நடைபெற்றது.
அதில் சுற்றுவட்டார பொதுமக்கள் அலங்கரிக்கப்ப்ட்ட பல்லக்குகளில் பூத்தட்டுகள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டு சென்றனர். அதனை தொடர்ந்து சித்திரை மாதம் 3-வது செவ்வாய்கிழமையன்று(ஏப்ரல் – 30) அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழாவானது தொடங்கியது. அந்நாட்களில் காலை மற்றும் மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளின் பிரசாதமாக கூழ் ஊற்றுவதும், கொள்ளுக்கஞ்சி ஊற்றுவதும் பொங்கல் மற்றும் நீர்மோர் பானக்கங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவின் முதல்நாளான நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் மலர்குளம், கருப்பர்கோவில், சத்குரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்திலிருந்தும் பக்தர்கள் பால்குடம் எடுத்து மேலதாளங்களுடன் மலையை சுற்றிவந்து கோவிலின் முன்பு உள்ள பூக்குழியில் இறங்கி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இன்று(புதன்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தும் கிடாய் வெட்டியும் ஆண், பெண் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். மாலை படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 9-ம் தேதியன்று விடையாத்தியுடன் திருவிழாவானது நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் ஆங்காங்கே அன்னதானமும், தண்ணீர்பந்தல்களும் அமைத்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறையினருடன் இணைந்து விழாகுழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.