சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம்பாளையம் திருச்சி துறையூர் சாலையில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான முருகன். கூலித் தொழிலாளியான இவர் நேற்று தில்லாம்பட்டியிலிருந்து பூணாம் பாளையத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் திருவானைக்காவல் கணபதி நகரை சேர்ந்த 54 வயதான ராஜேந்திரன் காரில் திருச்சியில் இருந்து துறையூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூனாம்பாளையம் திருச்சி துறையூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்த முருகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.