திருச்சி விமானநிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவிட்டு வெளியே அனுப்பி வைத்தனர். சிறிதுநேரத்தில் விமானநிலைய வாகன நிறுத்துமிடம் அருகே சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியுடன் வாலிபர் ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்ட மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி மதுரை மாவட்டத்தை சேர்ந்த பொண்ணுகாளை என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம், சிங்கப்பூரில் தரகர் ஒருவர் கொடுத்த அனுப்பிய தங்கத்தை திருச்சி விமானநிலையத்துக்கு வெளியே நிற்கும் வாலிபரிடம் கொடுத்தால் அந்த நபர் ரூ.10 ஆயிரம் தருவார் என கூறியுள்ளனர். இதனை நம்பி பொண்ணுகாளையும் தங்கத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வெளியே நின்ற வாலிபர் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 பேரையும் விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமானநிலைய போலீசார் விசாரித்துவிட்டு, இது தங்கம் கடத்தல் விவகாரம் என்பதால் மீண்டும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறையினர் தங்கம் கடத்தி வந்த நபருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.மேலும், இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுங்கத்துறையினரின் சோதனையையும் மீறி கடத்தல் தங்கம் வெளியே சென்றது எப்படி?. ஒருவேளை இவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருந்து இருந்தால் கடத்தல் தங்கம் விவகாரம் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே விமானநிலையத்தில் தங்கம் கடத்தி வரும் நபர்களை தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும், கடத்தல் தங்கம் சோதனையையும் மீறி வெளியே சென்றது எப்படி? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் சக பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.