மேயர் பங்களாவை பாதாளசாக்கடை பணியாளர்களுக்கு ஒதுக்கிய திருச்சி மாநகராட்சி

0 425
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகில் கடந்த 2008ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் மேயர் மற்றும் துணை மேயர்க்காக இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டப்பட்டது.

 

அப்போது காங்கிரசை சேர்ந்த அப்போதைய மேயர் சாருபாலா தொண்டைமான் இந்த மேயர் பங்களாவில் குடியேறவில்லை. அதன் பிறகும் மேயர் பங்களா மட்டும் பூட்டிக் கிடந்தது. துணை மேயர் பங்களாவில் திமுக அன்பழகன் மட்டும் குடியேறினார். இதனிடையே மக்களவைத் தேர்தலில் பங்கேற்க சாருபாலா தொண்டைமான் மேயர் பதவியை ராஜினாமா செய்ய காங்கிரசை சேர்ந்த சுஜாதா மேயரின் முகாம் அலுவலகமாக பங்களாவை பயன்படுத்தி வந்தார்.

அதன் பிறகு அவரும் காலி செய்து கிளம்ப, 2011ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ஆர்.ஜெயா, தனக்கான மேயர் பங்களாவில் குடியேறாமல் துணை மேயரின் பங்களாவில் குடியேறினார். அப்போது துணை மேயராக இருந்தவர் ஆசிக் மீரா. இதனிடையே, துணை மேயர் பதவியை ஆசிக் மீரா ராஜினாமா செய்ததால், அதிமுகவைச் சேர்ந்த ஜெ.சீனிவாசன் புதிய துணை மேயரானார். அவரும் அந்த பங்களாவில் குடியேறவில்லை.மொத்தத்தில், கட்டப்பட்ட புதிய பங்களாக்களில் திமுக சேர்ந்த அன்பழகன் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஜெயா ஆகியோர் மட்டுமே வசித்துள்ளனர்.

2016ம் ஆண்டு இறுதியாக உள்ளாட்சி காலம் முடிவடைந்த பிறகு, தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில வருடங்களாக இரு பங்களாக்களும் பராமரிப்பின்றியும், புதர் காடாக மாறியும், கட்டிடங்களும் சேதமடைந்து இருந்தது, மாநகர மக்களின் வரிப்பணத்தில் கட்டிய இந்த பங்களாக்களை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் எனவும் மாநகராட்சியின் பிற தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், செய்தித்தாள்களிலும் செய்திகள் வெளியாகியது.

தொடர்ந்து அந்த இரண்டு மேயர் பங்களாக்களையும் மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தி, அங்கு உள்ள பொருள்களையும் தற்போது பாதுகாத்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான தில்லை நகர் உறையூர் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பல பகுதிகளில் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணிகள் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதுமட்டுமில்லாமல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை செய்வதற்காக தற்போது மேயரின் பங்களாவை பயன்படுத்திக்கொள்ள ஆணையர் உத்தரவிட்டார். கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக பாதாள சாக்கடை ஊழியர்கள் அந்த பங்களாவை பயன்படுத்தி வருகின்றனர்.
புதர் காடாக, குப்பை மண்டிக்கிடந்த இடத்தினை மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒதுக்கியது பாராட்டுக்குரியதாகும்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் மேயரின் பங்களாக்கள் மேலும் புதுப்பிக்கப்பட்டு தயார் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.