கல்வி தொலைக்காட்சி கண்காணிப்பு படிவம் – அசத்தும் திருச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள்
வீடே பள்ளிக்கூடமாய், தொலைக்காட்சியை வகுப்பறையாய், கல்வி சேனல் ஆசிரியராக மாறிவிட்ட காலகட்டம் இது! கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் எதுவும் செயல்படாத நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஆன்லைன் முறையிலும் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடத்தினை கற்று வருகின்றனர்.
தற்போது உள்ள தமிழக அரசின் முயற்சியால் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தப்பட்டு பிரத்தியேகமாக பள்ளி மாணவர்களுக்கு என்று தனித்தனி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அசத்தி வருகின்றனர். இதனை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வேண்டும் எனவும், அதன் மூலம் பாடங்களை கற்க வேண்டும் எனவும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி பல்வேறு செயல்பாடுகளுடன் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் அசத்தி வருகின்றனர். மாநகராட்சி மூலம் 77 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு தொடர்ந்து அங்கு உள்ள ஆசிரியர்களின் பணிகளால் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதையும், தற்போது இந்த (2021 -2022) கல்வியாண்டில் 405 மாணவர்கள் புதிதாக சேர்க்கையும் அதிகரித்துள்ளது. தற்போது ஆன்லைன் முறையில் கல்வி பயில்வதால் வீட்டில் இருக்கும் மாணவர்களை கல்வி தொலைக்காட்சி பார்க்க வைக்கவும், அவர்களை தொடர்ந்து ஆசிரியர்கள் கண்காணித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து பீமா நகர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி கூறுகையில்…”எங்கள் பள்ளியில் மாநகராட்சியின் ஒத்துழைப்பால் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. தற்போது இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி நாங்கள் கல்வி தொலைக்காட்சி பார்க்க பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

அதன்படி எங்கள் பள்ளியில் படிக்கும் சுமார் ஆயிரம் மாணவர்களும் தினமும் கல்வி தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் அட்டவணை மூலம் கல்வி கற்று வருகின்றனர். இதனை எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தினமும் 10 முதல் 15 மாணவர்களை தொடர்பு கொண்டு தினமும் என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள் எனவும் குழந்தைகளை கண்காணித்து வருகிறோம். கல்வி தொலைக்காட்சி பார்த்து மாணவர் கண்காணிப்பு படிவத்தையும் பெற்றோர்களிடம் கொடுத்து வார இறுதிநாட்களில் பெற்றோரிடம் அதனை கையொப்பமாக பெற்று அதனையும் கண்காணிக்கிறோம்” என்றார்

