திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை(என்கிற) நொண்டி குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன்(வயது 28) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர். இதில் பெலிக்ஸ்ஜான்சன் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலை பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அலெக்ஸ் ரவுடியின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்டபோது அவரது நண்பர்கள் விரைவில் என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
அதனால் இந்தக் கொலை பழிக்குப் பழி நடந்திருக்குமோ என திருவெறும்பூர் போலீசார் சந்தேகித்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித் குமார் உத்தரவின் பேரில், திருவரம்பூர் டிஎஸ்பி சுரேஷ் குமார் அவர்களின் ஆலோசனையில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோரின் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளான பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு ஜேஜே நகரை சேர்ந்த ஜெயராமனின் மகன் சக்திவேல்( வயது 21) மற்றும் அவரது சகோதரர் ரமேஷ்(வயது 26), திருச்சி சுப்ரமணியபுரம் மீன் கிராஸ் தெருவை சேர்ந்த சிவகுமாரின் மகன் மனோஜ்குமார் (வயது19), மேலும் குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷின் மகன் சுபாஷ் (வயது19), திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தரராஜ் நகரை சேர்ந்த மகேந்திர வர்மா என்பவரது மகன் விஜி என்கின்ற பிரகாஷ்ராஜ்(வயது 19), திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த மகேந்திரனின் மகன் கிஷோர்(வயது 19), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த ரபேல் என்பவரது மகன் பீட்டர்(வயது 21),
அதே பகுதியை சேர்ந்த திருநகர் ராமகிருஷ்ணனின் மகன் மனோஜ் (வயது 22), கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகன் மான் என்கின்ற சிவராம் (வயது23), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரபேல் என்பவரது மகன் டார்வின் ஆன்றோ (வயது 24) ஆகிய 10 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். துரிதமாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.