திருச்சி மாவட்டம் கல்லக்குடி அம்பாள் டாக்கீஸ் தெருவில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். அந்த தெருவில் பொதுப்பாதை கருங்கற்களை கொண்டு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் அங்கு வசித்து வருபவர் பரமசிவம் மகன் அல்லிராஜா(55). இவர் திடீரென கருங்கல் கப்பி ரோட்டின் குறுக்கே நடுரோட்டில் கல் நட்டு இந்த ரோடு எங்களுக்கு சொந்தமானது என்று திடீரென பகுதி மக்களிடம் வம்பிழுத்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் ரவிக்குமார் மனைவி ஜெயந்தி(41) கல்லக்கடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்து அல்லிராஜாவை கண்டித்ததோடு சாலை நடுவே போட்டப்பட்டு இருந்த கல்லை அகற்றி இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அல்லிராஜாவின் தம்பியும், பரமசிவத்தின் மகனுமான பழனிச்சாமி(45) மதுபோதையில் அதே கருங்கல் சாலையின் குறுக்கே கயிறு கட்டி இது எங்களுக்கு சொந்தமான இடம் இதில் யாரும் நடந்து செல்ல கூடாது என்று சண்டை பிடித்துள்ளார். மேலும் பகுதி மக்கள் அவ்வழியே செல்லும் போது தகாத வார்த்தைகள் சொல்லி திட்டி மிரட்டி உள்ளார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி பரமேஸ்வரி(40), மகள் கீர்த்தனா(18), மருமகன் பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய்(26) ஆகியோரும் பொதுமக்களை திட்டியுள்ளனர்.
இந்நிலையில் மறுபடியும் ரவிக்குமாரின் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் கல்லகுடி சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது பழனிச்சாமி போலீசாரையும் வாக்குவாதம், வீண்வம்பு செய்துள்ளார். இதனால் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் பழனிச்சாமி, விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டு லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.