போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

0 357
Stalin trichy visit

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.18 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்கள் 48 மணி நேரத்திற்குள் அதிரடி கைது

கடந்த 10.04.23-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்திரோட்டில் இயங்கி வரும் ஒரு தனியார் கன்சல்டன்சி, போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக தினசரி நாளிதழில் வெளிவந்த போலி விளம்பரத்தை நம்பி தமிழகத்தை சேர்ந்த 5 பட்டதாரி இளைஞர்கள் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 8 நபர்கள், போலந்து நாட்டிற்கு வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்து மேற்படி தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தை அனுகியதன் பேரில், மேற்படி இளைஞர்களிடமிருந்து சுமார் ரூ.18 லட்சம் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணை (offer Letter) வழங்கி ஏமாற்றியதாக பெறப்பட்ட புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கபட்டு துரிதமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. மேலும் தனிப்படையினர் விசாரணை செய்தும், மேற்படி தனியார் கன்சல்டன்சியின் உரிமையாளர் மீனாட்சி 28/23, க.பெ.முத்துகிருஷ்ணன் மற்றும் மேலாளர் பாலகிருஷ்ணன் 32/23, த.பெ.பாலமுனியசாமி ஆகியோர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி எதிரிகளை கைது செய்தபோது, விசாரணையில் இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் மேற்படி தனியார் கன்சல்டன்சி நடத்தி வருவதும் இதுவரை சுமார் 250 நபர்களை போலந்து, ருமேனியா, செர்பியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் டெல்லியில் உள்ள Regan கல்சல்டன்சி என்ற நிறுவனத்தின் மூலம் ஆட்களை வேலைக்கு அனுப்பி வருவதும், மேலும் இவர்களுக்கு சென்னை, மும்பை, மதுரை ஆகிய இடங்களில் சப் ஏஜென்டுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவருகிறது.

போலந்து நாட்டில் Gurupa Traders & Nosez என்ற நிறுவனத்தின் மூலமும் மற்றும் ரூமேனியா நாட்டில் Zero E Fuels என்ற நிறுவனத்தின் மூலமும் போலி பணி நியமன ஆணைகள் (offer Letters) பெற்று வருவதும் தெரியவந்தது. தற்சமயம் 60 முதல் 70 நபர்கள் வரை இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவருகிறது. அவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெற்ற பணத்தை மலேசியாவில் உள்ள போலந்து நாட்டின் Gurupa Trade & Nosez என்ற நிறுவனத்தின் அலுவலக வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் வேலை கேட்டு வரும் நபர்களிடம் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டும், இவர்களுடைய கமிஷன் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை எடுத்துக்கொண்டும். மீதமுள்ள தொகையில் விமான கட்டணத்திற்கும், விசா பெறுவதற்கும் செலவு செய்தது போக மீதமுள்ள தொகையையும் இவர்களே வைத்துக்கொள்வதாக விசாரணையில் தெரிவித்தனர்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்தும், எதிரிகளை கைது செய்த தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். மேலும் இதுபோன்று வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விளம்பரங்களை நம்பி, இளைஞர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிப்பவர்களின் விவரம் காக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.