திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 49). விவசாயி. இவருக்கு திருமணமாகி சாந்தி (45) என்ற மனைவியும், அரவிந்த் குமார்(29), வினோத்குமார்(19) என 2 மகன்களும் உள்ளனர். சுப்பிரமணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் (45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சுப்பிரமணி காளியம்மாளுடன் கடந்த 7 வருடமாக இருந்து வந்ததாக தெரிகிறது.

சாந்தி தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரும் இரும்பு பைப்பால் தனது தந்தையான சுப்பிரமணியை ஓங்கி அடித்துள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். தந்தையை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.