இறந்தவரின் உடலை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம்; அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த சேசலூர் அருகே பாலப்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெரியாறு என்ற ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் மழை நீர் இந்த ஆற்றில் ஆர்ப்பறித்து செல்லும் போது மக்கள் பாலப்பட்டியை கடந்து செல்ல முடியாமல் ஒரே பகுதியில் முடங்கி இருக்கும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இதுமட்டுமின்றி சாதாரன நாட்களில் கூட அவசர தேவை என்றாலும் பாதிக்கப்பட்டவர்களை சுமார் 2 கிலோ மீட்டர் பிரதான சாலைக்கு தூக்கி வந்து தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்து வருகின்றது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தவர் ஒருவரின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்ல ஆற்றில் பாலம் இல்லாததால் தண்ணீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தற்போது ஆற்றில் நீர் செல்லும் நிலையில் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து கொண்டு ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து சென்று இறந்தவரின் உடலை தகனம் செய்தனர். பெரியாற்றில் பாலம் இல்லலாததால் பல நேரங்களில் அந்த பகுதி தனிதீவு போல் ஆகிவிடுகின்றது.
மழை நேரத்தில் மாணவ, மாணவிகள் கூட பள்ளிக்கு செல்ல முடியாத அளவில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் மாணவ, மாணவிகள் கல்வி கேள்விக்குறியாகி விடுகின்றது. அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலையில் உயிரிழப்பும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. ஆகவே அதிகாரிகள் பாலப்பட்டி பகுதி மக்களின் நலன் கருதி பெரியாற்றில் பாலம் அமைத்து தந்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.