தன்னை மீட்ட தீயணைப்பு வீரருக்கு நன்றி தெரிவித்த நாய்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி குளத்தின் அருகே பொன்னம்மாள் என்பவரின் தோட்டம் உள்ளது. தோட்டத்தின் ஒரு பகுதியில் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து நேற்று மாலை நாயின் சப்தம் வந்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் சென்று பார்த்த போது சுமார் 40 அடி வரை தண்ணீர் இருந்த கிணற்றில் நாய் சுற்றி சுற்றி வருவதை பார்த்து இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது நாய் நீரில் நீண்ட நேரம் இருந்ததால் குளிர் தாங்க முடியாமல் ஒரு ஓரத்தில் நடுக்கத்துடன் நின்றிருந்தது.
உடனே தீயணைப்பு வீரர் முத்துச்சாமி கயிற்றை இறுகப்பற்றி பிடித்துக் கொண்டு கிணற்றில் உள்ளே இறங்கினார். பின்னர் நாயை லாவகமாக ஒரு குச்சியை வைத்து பிடித்து மேலே கொண்டு வந்து விட்டனர். ஆனால் நாய் அங்கிருந்து ஓடிவிடாமல் தன்னை மீட்ட வீரர்களை சுற்றி சுற்றி வந்து நன்றியுணர்வை வெளிப்படுத்தியது காண்போரை நெகிழ வைத்தது.