திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களாகிய காய்கறிகள் மற்றும் பழவகைப் பயிர்கள் 29000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிகம் லாபம் ஈட்டக்கூடிய இப்பயிர்களின் கீழ் உள்ள பரப்பினை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2021-22-ம் நிதியாண்டில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு மா, கொய்யா அடர் நடவு, எலுமிச்சை பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம், உதிரி மலர்களாகிய மல்லிகை, இக்ஸோரா பரப்பு விரிவாக்கம், கிழங்கு வகை மலர்களாகிய சம்மங்கி பரப்பு விரிவாக்கம் ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்க இலக்குகள் பெறப்பட்டுள்ளன.
மழை நீரை வீணாக்காமல் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள பண்ணைக் குட்டைகள் 20X20X3 மீட்டர் அளவில் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்களான சிப்பம் கட்டும் அறை, 9X6 மீ அளவில் அமைத்து அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்து சந்தைப் படுத்துவதற்கும், எளிய முறையில் வெங்காய சேமிப்பு கிடங்கு 25 மெ.டன் கொள்ளளவில் அமைத்து கொள்வதற்கும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கும் நடமாடும் காய்கறி வண்டிகள் 50 சதவீத மானியத்தில் தயார் செய்து கொள்ள இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் உயர் தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து வாழ்வாதாரத்தை அதிகரித்துக் கொள்ள நிழல்வலை அமைத்து காய்கறி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து தங்கள் வயலில் நடவு செய்து கொள்ளவும், அருகில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கூடுதல் வருமானம் பெற்றுக் கொள்ளவும், சதுர மீட்டருக்கு ரூ.355 வரை மானியமாக விருப்பமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.