நகை கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, நவ. 16 திருச்சி கே.கே.நகரில் கடந்த 27.09.22 ஆம் தேதி வீடு புகுத்த ஒருவன் வீட்டில் இருந்து பெண்ணின் கைகளை கட்டிபோட்டு, அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், அவரது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது உசேன் (28) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் முகமது உசேன், கே.கே நகரில் அதிகாலை வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தும், அவர் கழுத்தில் அணிருந்த 6, பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தும், ஆசாத் நகரில் அதிகாலை துளசி இலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 9 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தும் சென்ற வழக்கு உட்பட முகமது உசேன் தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 30 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே முகமது உசேன் தொடர்ந்து பெண்களிடம் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பெண்களிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள முகமது உசேன் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.