மதுபோதையில் கத்திக் குத்து தொழிலாளி சாவு – இளைஞர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடகுடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை கிராமத்தில் உள்ள ராசையன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(50) யாரிடமும் எந்த வம்பிற்கும் போகாமல் தான் உன்டு தன் வேலை உண்டு என அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் கட்டில் பின்னும் கூலி தொழில் செய்து வருகிறார்.இவரின் பின்புறம் உள்ள வீட்டில் வசிப்பவர் வேலுச்சாமி மகன் தியாகு(27) திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சமயபுரம் பகுதியில் சிறிது காலம் ஆட்டோ ஓட்டியும் தற்போது ஊர் சுற்றியும் திரிந்துள்ளார்.
வசதிபடைத்த தியாகு தன் பக்கத்து வீடான பாலகிருஷ்ணன் வீட்டை விலைக்கு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் தியாகு பாலகிருஷ்ணனை உன்னையும்,உன் மகன்களையும் தீர்த்துக் கட்டி விடுவேன் என எச்சரித்து சென்றுள்ளார். பின்னர் நேற்று இரவு வீட்டு வாசலில் பாலகிருஷ்ணன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
திட்டம் போட்டு வைத்தது போல் இரவில் மதுபோதையில் வந்த தியாகு பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார்.அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தியாகுவை கைது செய்தனர்.