ரவுடி எண்ணூர் தனசேகரன் குறித்து தகவல் கிடைத்தால் உடனே போலீசாரிடம் தெரிவித்துவிடுவோம்; உறவினர் பேட்டி

0 457
Stalin trichy visit

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரனை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த வேங்கூரில் தனசேகரன் வீட்டிற்கு சென்னையில் இருந்து 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தனசேகரன் அங்கு இருக்கிறாரா? அல்லது வேறு எங்கும் பதுங்கி இருக்கிறாரா? என்பது குறித்து குடும்பத்தாரிடமும் அக்கம் பக்கத்திலும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து தேடியதாகவும், மேலும் அறைகளில் உள்ள கப்போர்டு, பீரோ ஆகியவற்றை கலைத்து போலீசார் தேடியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், தனசேகர் குறித்த தகவல் கிடைத்தால் போலீசுக்கு நாங்களே கூறி விடுவோம். மேலும் ஒரு நாட்களிலோ அல்லது இரண்டு நாட்களில் அவரை நாங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளோம். போலீசார் அடாவடியாக உள்ளே நுழைந்து கதவை உடைத்து தேடினர். நான்கு தடவை வீட்டிற்குள் வந்து போலீசார் தேடினர்.

வீட்டில் இல்லாத ஆளை இங்குதான் இருக்கிறார் என்று போலீசார் அடாவடியாக கூறி டார்ச்சர் செய்கின்றனர். இதனால் குடும்பத்தில் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் இதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும் சட்டக் கல்லூரியில் படிக்கும் அவரது தம்பியை வீட்டிலிருந்து அழைத்து சென்று காருக்குள் சிறை வைத்துள்ளனர். இதனால் அவருடைய படிப்பு கெட்டுவிடும் நிலை உள்ளது.

தனசேகரனை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று போலீசார் அழைத்துச் சென்று கை கால்களை உடைத்து அனுப்புகிறார்கள். போலீசார் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்கள். திருந்தி வாழ்வதற்கு போலீசார் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா? என்றார். இரவு நேரத்திலும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேங்கூரில் தனசேகரனை பிடிக்க தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.