குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

0 388
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு பாரதியார் நகர் வடக்கு பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மழைநீர் செல்வதற்கு வழியில்லாத நிலையில் மழைநீர் நேற்று மாலை வரை வடியாமல் அப்படியே இருந்தது. இதுமட்டுமின்றி தொடர் மழை வந்தால் மேலும் வீடுகளுக்குள் முழுவதுமாக மழைநீர் செல்லும் நிலையும் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மணப்பாறை–விராலிமலை சாலையில் பாரதியார் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை வெளியேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு, அதற்காக பணிகள் தொடங்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பாரதியார் வடக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்களை இணைக்காமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தான் மழைநீர் செல்ல முடியாத நிலை இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.