சாலையில் சுற்றிய 76 மாடுகள் பிடிப்பட்டன; அபராதம் செலுத்தி அழைத்து செல்ல உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரிந்த 18 கன்றுகள் உள்பட 76 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள், பணியாளர்களை கொண்டு ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அக்பர்அலி தலைமையில் 16 மாடுகள் மற்றும் 2 கன்றுகளும், அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில் 9 மாடுகள் மற்றும் 6 கன்றுகளும், பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி தலைமையில் 17 மாடுகள் மற்றும் 6 கன்றுகளும், கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் 16 மாடுகள் மற்றும் 4 கன்றுகளையும் பிடித்துள்ளனர்.
மேற்படி மாடுகள் மற்றும் கன்றுகளின் உரிமையாளர்கள் முதல் முறை என்பதால் பிடிபட்ட கால்நடையின் பராமரிப்பு செலவுத்தொகையுடன் அபராத தொகையையும் அரசு கருவூலத்தில் செலுத்தி 3 நாட்களுக்குள் திரும்ப அழைத்து செல்ல வேண்டும். அடுத்தமுறை இதே நடவடிக்கை தொடருமாயின் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.