மாணவர்களை வராண்டாவில் அமர வைத்து பாடம் நடத்தியதற்கு பெற்றோர் எதிர்ப்பு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் தொடக்கப்பள்ளியில் உள்ள சில வகுப்பறைகள் மழையால் சேதம்அடைந்து இருந்தது. இதனால் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியதால் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களை வராண்டாவில் அமர வைத்து பாடம் நடத்தினார்கள். இதனால் சில மாணவர்கள் நனைந்துள்ளனர். இது பற்றி அறிந்த பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் வேலுசாமி தலைமையில் பள்ளிக்கு திரண்டு வந்தனர். வகுப்பறைகள் சேதம் அடைந்த நிலையில் மாணவர்களை எப்படி வராண்டாவில் அமர வைத்து பாடம் நடத்தலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயர்நிலைப்பள்ளி கட்டிடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும், மாணவர்களை வராண்டாவில்அமர வைத்ததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்து சேதம் அடைந்த வகுப்பறைகளை பார்வையிட்டதுடன், மாணவர்களை உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.